வறுமை அதிகரிப்பை எடுத்துக்காட்டும் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை
by Bella Dalima 15-09-2018 | 9:11 PM
Colombo (News 1st) புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 5000 பயனாளிகளுக்கான சமுர்த்தி கூப்பன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாத்தளையில் வழங்கப்பட்டது.
2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கை என்ற தொனிப்பொருளின் கீழ் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான சமுர்த்தி கூப்பன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு மாத்தளை நகரின் பெருந்தெருக்கள் மற்றும் நடைபாதைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
சமுர்த்தி பயனாளிகளை புதிதாக தெரிவு செய்யும் செயற்பாடு உரிய முறையில் இடம்பெறவில்லை என கூறியும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன பங்கேற்கவில்லை.
தமது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களை சந்தோசப்படுத்தியதாகவும் வருமானத்தை அதிகரித்ததாகவும் வறுமையை ஒழித்ததாகவும் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களும் கூறினர்.
எனினும், பல வருடங்கள் கடந்தும் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.
அவ்வாறெனில், வறுமை அதிகரித்து செல்கின்றது என்பதே நிதர்சனம்.
அதிகாரிகள் மக்களுக்கு காண்பிக்கும் புள்ளிவிபரங்கள் திரிவுபடுத்தப்பட்டவையா அல்லது தமது நன்மைக்காக தயாரிக்கப்பட்டவையா?