ராஜிவ் கொலை: எழுவர் விடுதலை தொடர்பில் அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் அறிவிப்பு

ராஜிவ் கொலை: எழுவர் விடுதலை தொடர்பில் அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் அறிவிப்பு

ராஜிவ் கொலை: எழுவர் விடுதலை தொடர்பில் அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2018 | 5:17 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாம் அறிக்கை அனுப்பவில்லை என தமிழக மாநில ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வௌியான தகவலுக்கு பதில் அளிக்கும் வகையில், ஆளுநர் மாளிகை இந்த மறுப்பறிக்கையை வௌியிட்டுள்ளது.

மிகவும் சிக்கலான இந்த வழக்கில், சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் , கைது செய்யப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

மரண தண்டனைக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரைத் தவிர ஏனைய 19 பேரையும் விடுவித்தது.

2000 ஆம் ஆண்டு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஏனைய 6 பேரின் தண்டனையும் 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 6 ஆம் திகதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூடி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது.

இது தொடர்பில் ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியதாக ”த ஹிந்து” செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சிக்கலான வழக்கு என்பதால் சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வௌியிட்டுள்ளது.

7 பேரின் விடுதலை குறித்து அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்