மக்கள் சக்தி: வௌி மாவட்டத்தினர் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மீனவர்கள்

மக்கள் சக்தி: வௌி மாவட்டத்தினர் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மீனவர்கள்

மக்கள் சக்தி: வௌி மாவட்டத்தினர் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மீனவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2018 | 9:06 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

வடமராட்சி – கட்டைக்காடு பகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் சக்தி குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டவர்களே கட்டைக்காடு பகுதியில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

அதனையடுத்து, மருதங்கேணி பகுதிக்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் சக்தி குழுவினர் பதிவு செய்தனர்.

மருதங்கேணியில் சுமார் 450 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வெளியிடத்து மீனவர்களின் வருகையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

பிற மாவட்ட மீனவர்கள் இயந்திரங்கள் மூலம் கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதால், மீன்வளம் சூறையாடப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

மக்கள் சக்தி குழுவினர் முள்ளியான் பிரதேசத்திற்கும் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொண்டனர்.

இந்த பகுதியிலுள்ள பிரதேச சுகாதார நிலையம் இயங்காமையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இவர்களுக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாளையடி பிரதேசத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

எனினும், குறித்த பிரதேசத்திற்கு செல்லும் பாதை சீரின்மையால், பல்வேறு மரணங்களும் நிகழ்ந்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் சக்தி – இல்லங்கள் தோறும் குழுவினர் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் தாளையடி பிரதேசத்திற்கும் சென்றிருந்தனர்.

அங்கு வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிப்பதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

மற்றுமொரு குழுவினர் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி, மாவை கலட்டி பிரதேசங்களுக்கு சென்றிருந்தனர்.

2017 இல் மீளக்குடியேறிய 350 குடும்பங்கள் அளவில் வாழும் மயிலிட்டியில் 150 குடும்பங்களுக்கு இன்னும் வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் திண்டாடுகின்றனர்.

மாவை கலட்டி பிரதேச மக்களின் பிள்ளைகள் முறையான போக்குவரத்து வசதிகள் இன்மையால் உயர்தர கல்வியைத் தொடர்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்