சீர்திருத்த சட்டமூலம் மீதான விசாரணை ஒத்திவைப்பு

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் மீதான விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 14-09-2018 | 8:35 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான சட்டமூலம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்க இன்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு சவால் விடுக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில உள்ளிட்ட மனுதாரர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு பதில் நீதியரசர் சிசிர டி ஆப்ரூ மற்றும் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்த்திரா பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகி கருத்துக்களை முன்வைத்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடக்கம் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளினதும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்வதாக உறுதி அளித்து, மக்களிடம் அதிகாரத்தைக் கோரியிருந்ததாக இதன்போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றுக்கு அறிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியும் இந்த வாக்குறுதிக்கு அமைய மக்கள் பலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதால், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு பொதுசன வாக்கெடுப்பு அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார். தற்போது முழுமையான அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் தயாரிக்கப்படும் நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் தற்போது நாட்டில் பல பகுதிகளுக்கு சென்று அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தௌிவுபடுத்தி வருகின்றனர். குருநாகலில் நேற்று நடைபெற்ற தௌிவுபடுத்தல் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நாமல் கருனாரத்ன கலந்து கொண்டிருந்தார். முழுமையான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இதன்போது ஜயம்பதி விக்ரமரத்ன கருத்து தெரிவித்ததுடன், 20 ஆவது திருத்தம் தொடர்பில் நாமல் கருணாரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.