முறிகள் மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை

முறிகள் மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை: மத்திய வங்கி தீர்மானம்

by Staff Writer 14-09-2018 | 3:35 PM
Colombo (News 1st) முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். சர்வதேச கணக்காய்வாளர் சங்கத்தினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன், விசாரணைகளுக்காக சுமார் 9 மாதகாலம் தேவைப்படலாம் என மத்திய வங்கி கூறியுள்ளது. விசாரணைகளின் மூலம், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரியவரும் பட்சத்தில் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.