சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படும்

பரிந்துரைக்கமைய சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் மறுசீரமைக்கப்படும் - ஜனாதிபதி

by Staff Writer 14-09-2018 | 3:27 PM
Colombo (News 1st)  தம்மால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை இன்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். குழுவின் பரிந்துரைகளில் ஒப்பந்தம் தொடர்பில் எதிர்மறையான அம்சங்கள் காணப்படும் பட்சத்தில் அது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள தம்மால் நியமிக்கப்பட்ட குழுவிடம் ஒவ்வொருவரும் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இதேவேளை, எந்த காரணத்திற்காகவும் தேர்தலை பிற்போடுவதற்கான எண்ணம் இல்லை எனவும் ஜனாதிபதி கூறினார். எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ததன் பின்னர் தேர்தல் நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டிலுள்ள மூன்று தேர்தல்களிலும் விருப்பு வாக்கு முறைமையைினை இல்லாமல் செய்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடனான சந்திப்பில் தெரிவித்தார். தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மீண்டும் பரிசீலிக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். தம்மை கொலை செய்வதற்கான திட்டமுள்ளதாக வௌியான தகவல் குறித்து ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்வு யோசனைத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தீர்வு யோசனைத் திட்டத்தை மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் யுத்தத்தின் பின்னரான நிலையை சுமூகமாக நிவர்த்திப்பது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான விடயங்களை இந்த தீர்வு யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவத்தின் பலம் ஆகியன பலவீனமடையவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் மீது வழக்கு தொடராமல், கைது செய்வது, தடுத்து வைப்பது தொடர்பான பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி இதன்போது அதிருப்தி வௌியிட்டார். இதேவேளை, எரிபொருளின் விலை அதிகரிக்கின்றமை தொடர்பில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, விலைச்சுட்டெண் ஊடாக விலை அதிகரித்து செல்வதாகவும், எதிர்காலத்தில் எரிபொருள் விலைச்சுட்டெண் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.