எரிவாயுக் கசிவினால் 70 இடங்களில் தீ விபத்து

அமெரிக்காவில் எரிவாயுக் கசிவினால் 70 இடங்களில் தீ விபத்துகள்: ஒருவர் பலி, பலர் காயம்

by Bella Dalima 14-09-2018 | 5:58 PM
அமெரிக்காவில் எரிவாயுக் கசிவினால் 70 இடங்களில் தீ விபத்துகள்: ஒருவர் பலி, பலர் காயம் அமெரிக்காவில் எரிவாயுக் கசிவினால் 70 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதன்போது, 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (13) வடக்கு பொஸ்டனுக்கு அருகே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயுக் குழாய் வெடித்துள்ளது. இதனால் எரிவாயுக் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் பரவியது. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும், எரிவாயுக் கசிவு தொடர்கிறது. எனவே, குறித்த பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. கொலம்பியாவில் இருந்து வரும் எரிவாயுக் குழாயில் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக குழாய் வெடித்து தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.