மக்கள் சக்தி: வாழ்வாதாரப் பிரச்சினைகளுடன் மன்னார் மக்கள்
by Staff Writer 13-09-2018 | 9:01 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டம் இன்றும் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இரண்டாவது நாளாக விஜயம் மேற்கொண்ட மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
பாப்பாமோட்டை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட மக்கள் சக்தி குழுவினரை மீனவ சமூகம் வரவேற்றது.
களப்பு மீன்பிடியில் ஈடுபடும் இந்த மீனவர்கள் தமது படகுகளை நிறுத்துவதற்கும் தாம் தரித்து நிற்பதற்கும் இடமில்லை என விசனம் தெரிவித்தனர்.
தோட்டவெளியில் இருந்து பாப்பாமோட்டைக்கு வருகை தரும் மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பாப்பாமோட்டை மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
60 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதிக்கு குடிநீர் வசதியும் வழங்கப்படவில்லை.
தொடர்ந்து, 300 குடும்பங்கள் வசிக்கும் சன்னார் கிராமத்திற்கும் நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி திட்டக் குழுவினர் பயணித்திருந்தனர்.
ஜப்பான் வீட்டுத் திட்டத்தினால் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் வீடுகள் பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன.
50-ற்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருப்பதற்கு யாருமின்றி வெறுமையாகக் காணப்படுகின்றன.
பற்றைக்காடாக இந்த வீடுகள் காட்சியளிக்கும் நிலையில், 25 குடும்பங்கள் வறட்சிக்கு மத்தியிலும் வீடுகள் வழங்கப்படாத நிலையில் சிறு ஓலைக்குடில்களிலேயே வாழ்க்கையை முற்கொண்டு செல்கின்றன.
இரண்டு போகங்களை மேற்கொண்டு வந்த நிலையில், வறட்சி காரணமாக ஒரு போகத்தையே முன்னெடுத்து வரும் ஆத்திமோட்டை விவசாயிகளையும் இல்லங்கள் தோறும் குழுவினர் சந்தித்தனர்.
இதேவேளை, மக்கள் சக்தியின் மற்றுமொரு குழுவினர் கீழியன் குடியிருப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
மரம் வெட்டும் தொழில் செய்யும் இந்தக் கிராம மக்கள் இன்று வேலைவாய்ப்புகள் இன்றி எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போதும் இவர்கள் கொட்டிலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்தும் வசந்தபுரம் பகுதிக்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர்.
அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளை இந்தப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பேசாலையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெற்றி மக்கள் குடியிருப்பிற்கு பயணிக்கும் வீதி மிக மோசமான நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.