தமிழில் கையெழுத்திடுவோம்: விழிப்புணர்வூட்டும் ஆரி

தமிழில் கையெழுத்திடுவோம்: விழிப்புணர்வூட்டும் நடிகர் ஆரி

by Bella Dalima 13-09-2018 | 5:35 PM
தாய் மொழியில் கையெழுத்திடுவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளார் நடிகர் ஆரி. வட அமெரிக்காவில் உள்ள டெலஸ் மாகாணத்தில், வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய 31 ஆவது தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கம் தொடங்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் நடிகர் ஆரி அறங்காவலராக உள்ள, 'மாறுவோம் மாற்றுவோம்' எனும் அறக்கட்டளையும் இணைந்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் முழுக்க பரப்புரை செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிரசாரப் பேரணியையும் நடத்தவுள்ளார் ஆரி. அலுவல் பணிகள் உள்ளிட்ட அனைத்து விதமான விண்ணப்பங்களிலும், தான் தமிழில் கையெழுத்திடுவதாக ஆரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, ''என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்திப் பேசும் அரசியல்வாதிகளும் நடிகர்களும் இனி தங்களது அலுவலகக் கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும். உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் நம் ஆங்கிலக் கல்வி மோகம் தான். ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களைத் தோற்கடித்து விட்டது. தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம். நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே. ரெட்டைச் சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஆரி.