தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 80 இலட்சம் மோசடி

ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி: மூவர் கைது

by Staff Writer 13-09-2018 | 4:58 PM
Colombo (News 1st) ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த ஜப்பான் பிரஜை உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்தது. எக்கோ ஜப்பான் ட்ராவல்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி பல இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேகநபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வருகை தந்துள்ள குறித்த ஜப்பான் பிரஜையின் விசா கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுமார் 20 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்தது. இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, 80 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.