கூட்டு வர்த்தகமாகும் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள்

சீனக்குடா துறைமுக எண்ணெய் குதங்களை லங்கா IOC நிறுவனத்துடன் கூட்டு வர்த்தகமாக முன்னெடுக்கத் திட்டம்

by Staff Writer 13-09-2018 | 8:11 PM
Colombo (News 1st) திருகோணமலை சீனக்குடா துறைமுகத்திலுள்ள எண்ணெய் குதங்களை லங்கா IOC நிறுவனத்துடன் கூட்டு தொழில் முயற்சியாக முன்னெடுக்கும் திட்டம் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய பொது சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. லங்கா - இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சீனக்குடா துறைமுகத்திலுள்ள 15 எண்ணெய் குதங்களின் பூரண உரிமையையும் குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கவும், ஏனைய 85 எண்ணெய் குதங்களையும் கூட்டு தொழில் முயற்சியாக முன்னெடுக்கவும் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக அனுமதி பெறப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய பொது சேவை சங்கத்தின் செயலாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். அரசாங்கத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்பட்டதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க கூறினார். அந்த உடன்படிக்கைக்கு அமைய, லங்கா - இந்தியன் ஒயில் நிறுவனத்தால் தற்போது பயன்படுத்தப்படும் 15 எண்ணெய் தாங்கிகளும் முற்றாக குறித்த நிறுவனத்திடம் வழங்கப்படும். எஞ்சிய எண்ணெய் தாங்கிகள் 85 இல் 16 தாங்கிகளை புனரமைத்து நாட்டின் பயன்பாட்டிற்காக குறித்த நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்பது திட்டத்தின் நிபந்தனையாகும். அத்துடன், ஏனைய எண்ணெய் தாங்கிகள் கூட்டு வர்த்தகமாக பயன்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இன்று திருகோணமலைக்கு சென்றிருந்தார். திருகோணமலை முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் மத்தியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உரையாற்றினார். இந்திய உயர்ஸ்தானிகர் இன்று பிற்பகல் திருகோணமலையில் எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள வளாகத்திலுள்ள லங்கா IOC நிறுவன அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உயர்ஸ்தானிகரை வரவேற்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த பேனர் அவர் வருவதற்கு முன்னதாகவே கழற்றப்படுவதைக் காண முடிந்தது.