சந்தன P.ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்

11 இளைஞர்கள் கடத்தல்: சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 12-09-2018 | 3:54 PM
Colombo (News 1st)  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ள பாதுகாப்பு பிரிவின் தலைமைய அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன வௌிநாட்டிலிருந்து எதிர்வரும் 19 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது குறித்து மன்றுக்கு அறிக்கையிடப்படும் என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதவானிடம் தெரிவித்துள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட கடற்படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.