தாமதம் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்: மனித உரிமைகள் பேரவையில் அங்கலாய்ப்பு

by Staff Writer 12-09-2018 | 7:51 PM
Colombo (News 1st) 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும், அதில் சில விடயங்களில் தாமதம் நிலவுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை வரவேற்பதாக ஜேர்மன், மெஸிடோனியா, மொன்டெனேக்ரோ மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனர். தேசிய நல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் மற்றும் சமாதான முயற்சி முன்னுரிமைத் திட்டம் என்பவற்றை தாம் வரவேற்பதாக ஜக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடரில் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், சில விடயங்கள் தொடர்ந்தும் காலதாமதம் ஆகின்றதாகவும் இது நல்லிக்கணத்திற்கு பாதிப்பாக அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முறையான தலைமைத்துவமும் காலவரையறையுடனான செயற்பாட்டுத் திட்டமும் வகுக்கப்படுமாக இருந்தால், இலங்கை ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கு இலகுவாக அமையும் எனவும் குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நல்லிணக்கமும் சமாதானமும் உருவாகிய நாடாக இலங்கை மாறும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தன்னிச்சையாக தடுத்து வைப்பு பற்றிய ஐ.நா செயற்பாட்டுக்குழுவின் இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதி முறையில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகுவோர், தன்னிச்சையாக தடுத்து வைப்புகளுக்கு உள்ளாகும் அபாயமான நிலையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணைத் திறனில் உள்ள குறைபாடுகள், சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வளப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகளால் வழக்குகள் பல ஆண்டுகள் தேங்கிக்கிடப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கவரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்பு என்பன தற்போது இலங்கையில் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் தன்னிச்சையான தடுத்து வைப்பு பற்றிய ஐ.நா செயற்பாட்டுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துக்கள் தடையாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.