மலையக மாணவியின் பல்கலைக்கழகக் கனவு கலையுமா?

தாமதமான கடித விநியோகத்தால் கலையுமா மலையக மாணவியின் பல்கலைக்கழகக் கனவு?

by Staff Writer 12-09-2018 | 9:35 PM
Colombo (News 1st)  தாம் பட்ட கஷ்டத்தை தமது பிள்ளைகள் எக்காலத்திலும் அனுபவிக்கக்கூடாது என்பதுவே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு பெற்றோர்களினதும் ஏகோபித்த எதிர்பார்ப்பு. எப்பாடுபட்டாவது பல்கலைக்கழத்திற்கு தம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்துவரும் எத்தனையோ பெற்றோர்கள் எம் மத்தியில் உள்ளனர். வலப்பனையில் பல்கலைக்கழக அனுமதி பெற்று தோட்டத்தொழிலாளித் தாயொருவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த மகளுக்கோ, மகிழ்ச்சிக்குப் பதிலாக பேரதிர்ச்சியே காத்திருந்தது. வலப்பனை - மகாஊவ எனும் கிராமத்தில் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மைக்கல் நிலுக்ஷியா மேரி, எதிர்காலம் குறித்த கேள்விக்கான பதிலுக்காக காத்திருக்கிறார். கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகத்துறையில் தோற்றிய இவர், 2A, 1B பெறுபேற்றைப் பெற்றார். இதன் மூலம், இந்த வருடத்தில் குறித்த கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவியெனும் சிறப்பையும் நிலுக்ஷியா பெற்றார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மகிழ்சியை சுமந்து வரும் கடிதத்திற்காக இவர் பல நாட்களாகக் காத்திருந்தார். இதனையடுத்து, கடிதம் கிடைப்பதில் நிலவும் தாமதத்தின் பின்புலம் தொடர்பான சந்தேகம் இவர்களுக்கு வலுப்பெற்றது. எனினும், அந்தப் பகுதிக்கான தபாற்காரர் நிலுக்ஷியா மேரிக்கு மாமா உறவு முறை என அறிய முடிந்தது. களனி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்திற்கு இவர் தெரிவான போதிலும், அந்த வாய்ப்பு எட்டாக்கனியாகியுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் திகதியே கடிதம் வலப்பனை தபால் நிலையத்திற்கு வந்துவிட்ட போதும், செப்டம்பர் முதலாம் திகதி தான் தனக்கு கிடைத்ததாக நிலுக்ஷியா குறிப்பிட்டார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் வலப்பனை பொலிஸ் நிலையத்திலும் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வலப்பனை உதிவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு நிலுக்ஷியா தமது தாயுடன் இன்று சென்றிருந்தார். மாணவிக்கு உதவும் நோக்கில், வலப்பனை பொலிஸார் இன்று ஓர் உன்னத செயற்பாட்டில் ஈடுபட்டனர். கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அடிக்கடி சென்று வருவதென்பது இந்தக் குடும்பத்திற்கு மற்றுமோர் பொருளாதார நெருக்குதலைக் கொடுத்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, வலப்பனை பொலிஸார் நிதியுதவி வழங்கினர். தபால் சேவையிலுள்ள ஊழியரொருவர் தம்மிடம் சட்ட ரீதியாக ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தை மறைப்பதற்கோ, திருடுவதற்கோ, மாற்றுவதற்கோ முடியாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில், இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தண்டனை சட்டக்கோவையின் 17ஆது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வலப்பனை - மகாஊவ பகுதி தபாற்காரருக்கு வலப்பனை நீதிமன்றத்தினால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வலப்பனை தபால் நிலைய அதிபரை எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் ஆஜராகுமாறும் வலப்பனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்