ஹொங்கொங்கில் இரகசிய வங்கிக் கணக்கு

கிரிக்கெட் கொடுக்கல் வாங்கலுக்காக ஹொங்கொங்கில் இரகசிய வங்கிக் கணக்கு

by Staff Writer 12-09-2018 | 9:20 PM
Colombo (News 1st) இங்கிலாந்து விஜயத்தின் ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கவேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயற்சித்த சம்பவம் தொடர்பாக நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து தகவல்களை வௌியிட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பான வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஹொங்கொங் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டுள்ளது. 2017 செப்டம்பர் 27 ஆம் திகதி ஹொங்கொங்கில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் பயனாளியாக பன்யா சிலு எனும் நிறுவனமொன்று செயற்பட்டுள்ளது. 2017 செப்டம்பர் 27 ஆம் திகதியே இந்த நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவருக்கும் போட்டி ஒளிபரப்பு உரிமக் கட்டணத்தை செலுத்த முயற்சித்த இந்திய நிறுவனத்திற்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துகின்றன. ஹொங்கொங் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் நிதி சுயாதீனமாக மெக்ஸிகோ வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் எனவும் அந்த வங்கிக் கணக்கின் பயனாளி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்றும் மின்னஞ்சல்களின் ஊடாக இந்திய நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறனதொரு வங்கிக் கணக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடையாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா குறிப்பிட்டார். குத்தகை மானிய கொடுக்கல் வாங்கலுக்கு மெக்ஸிகோ பிரசித்திபெற்ற நாடாகும். பன்யா சிலு எனப்படும் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட கால எல்லையின் பிரகாரம் வினவியதில் விசேட கொடுக்கல் வாங்கலுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதா எனும் சந்தேகம் எழுகின்றது. எவ்வாறாயினும், இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்துவதுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவராக செயற்பட்ட நபர் சம்பவம் வெளியான பின்னர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.