ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகிய லூலா த சில்வா

ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகிய பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி

by Chandrasekaram Chandravadani 12-09-2018 | 11:59 AM
பிரேஸிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva) விலகியுள்ளார். இவர் தனக்குப் பதிலாக தனது நண்பர் ஒருவரை வேட்பாளராக அனுமதித்துள்ளார். 72 வயதான லூலா தனது 12 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்ற காவல்துறை தலைமையகத்தின் வெளியில் வைத்து, தொழிலாளர் கட்சியின் தலைவர் கலெய்ஸி கோஃப்மேன் இந்த முடிவை அறிவித்துள்ளார். லூலா மீதான ஊழல் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2 வாரங்களுக்கு முன்னர் பிரேஸிலின் தேர்தல் மேல் நீதிமன்றம், ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக போட்டியிட முடியாதபடி லூலாவுக்குத் தடை விதித்தது. தீவிர வலதுசாரிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரசாரப் பேரணியில் கத்தியால் குத்தப்பட்ட சில நாட்களுக்கு பின், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான 63 வயதான ஜயீர் பொல்சொனாரோவுக்கு பெரியதொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என, 2003 - 2010ஆம் ஆண்டு வரை பிரேஸிலின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த லூலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதேநேரம், குறித்த தேர்தலில் தனக்குப் பதிலாக பெர்னாண்டோ ஹத்தாட் என்பவர் வேட்பாளராகக் களமிறங்குவார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.