மக்கள் சக்தி திட்டக்குழுவினர் திருகோணமலை விஜயம்

மக்கள் சக்தி திட்டக்குழுவினர் திருகோணமலை விஜயம்

by Staff Writer 11-09-2018 | 10:11 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நியூஸ்ஃபெஸ்ட் - மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டக் குழுவினர் இன்று இறுதி நாளாகவும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு சென்ற மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டக்குழுவினர் அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து தமது பயணத்தை முன்னெடுத்தனர். கிண்ணியா தோனா கடற்கரைக்கு சென்ற இல்லங்கள் தோறும் திட்டக்குழுவினர் அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். தொடர்ந்தும் கொள்ளவெட்டுவான் பகுதிக்கு நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அங்கிருந்து நாவலடி கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். கங்கை நகரிலிருந்து வரும் யானைகள் இந்தக் கிராமத்தினூடாக சென்றே பனம்பழம் உட் கொள்கின்றன. குடியிருப்புகளூடாக செல்லும் யானைகள் தமது வாழ்வாதார பயிர் நிலங்களையும் துவம்சம் செய்தே பயணத்தை தொடர்வதாக மக்கள் விசனம் வெளியிட்டனர். இதேவேளை, கங்கை நகருக்கு சென்ற மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர், அங்கு குடிசையொன்றில் வாழும் வயோதிபப் பெண்மணியை சந்தித்தனர். நடக்க முடியாத தனது வயோதிபக் கணவர் மற்றும் மகளுடன் வாழ்வாதாரத்தை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் கொண்டு செல்கிறார் அவர். யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையிலும் தொடர்ந்து அதே குடிசையில் இந்தக் குடும்பம் வாழ்ந்து வருகிறது. இதனையடுத்து, நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி குழுவினர் இறால்குழிக்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். மற்றுமொரு மக்கள் சக்தி திட்டக்குழுவினர் மஜீட் நகர் பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையைத் தொடர்ந்து மூதூர் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மஜீட் நகர் மற்றும் ஷாபி நகர் கிராமங்களுக்கு சென்றனர். இரு கிராமங்களையும் மகாவலி கிளையாறு பிரிக்கும் நிலையில், போக்குவரத்து மார்க்கம் இன்றி இரு கிராம மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கட்டுமரத்தைப் பயன்படுத்தியே அபாயமிகு பயணத்தை இந்த கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். மஜீட் நகர் கிராம மக்கள் தமது பாடசாலைத் தேவை மற்றும் சுகாதார தேவை உட்பட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஆற்றைக்கடந்து ஷாஜி நகருக்கே செல்ல வேண்டியுள்ளது. அதேபோன்று, ஷாஜி நகர் கிராம மக்களின் வயல் நிலங்கள் மஜீட் நகரில் உள்ள நிலையில், அவர்கள் தமது பயணத்தை சிரமத்திற்கு மத்தியிலேயே முன்னெடுக்க வேண்டியுள்ளது. கட்டுமர சேவையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையே இடம்பெறும் நிலையில், இரவில் அவசர நிலையேற்படும் போது இம்மக்களின் நிலை கேள்விக்குறியாகிவிடுகின்றது. இதேவேளை, சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானாவின் வீட்டிற்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் இன்று சென்றிருந்தனர்.