மஹிந்த ராஜபக்ஸவே அடுத்த ஜனாதிபதி: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு

மஹிந்த ராஜபக்ஸவே அடுத்த ஜனாதிபதி: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு

மஹிந்த ராஜபக்ஸவே அடுத்த ஜனாதிபதி: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2018 | 8:22 pm

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் பிரதிநிதிகளும் தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இந்தியாவிற்கான மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு புது டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி வரவேற்றார்.

மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்ற சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் தளத்தில்,

விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அழைப்பினை ஏற்று இன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதி புது டெல்லி நகரை வந்தடைந்தார். அவர் 12 ஆவது இந்திய – இலங்கை உறவுகள் மற்றம் எதிர்கால நோக்கு தொடர்பிலான பகிரங்க கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

என பதிவிட்டுள்ளார்.

 

மஹிந்த ராஜபக்ஸ பெரும்பாலும் மீண்டும் ஜனாதிபதியாகலாம் என கூறும் சுப்ரமணியன் சுவாமி யார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரான சுப்ரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமியை நரேந்திர மோடி ஆட்சியின் முக்கிய சூத்திரதாரியாக இந்திய அரசியல் விமர்சகர்கள் அழைக்கின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிட்ட சொத்துக்குவிப்பு வழக்கை சுப்ரமணியன் சுவாமியே தாக்கல் செய்திருந்தார்.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ​2G அலைக்கற்றை மோசடி தொடர்பில் அவர் நீதிமன்றத்தை நாடினார்.

இதன் காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்தனர்.

இவரது செயற்பாடுகள் காரணமாக தென்னிந்திய அரசியலில் மாத்திரம் அல்லாது இந்தியாவின் தேசிய அரசியலிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட சுப்ரமணியன் சுவாமி தற்போது மஹிந்த ராஜபக்ஸவை இந்தியாவிற்கு அழைத்து, அவர் பொரும்பாலும் அடுத்த ஜனாதிபதியாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடா?

இத்தகைய கருத்தை வௌியிடுவதன் மூலம் அவர் சுயாதீன நாடு ஒன்றின் ஜனாதிபதி பதவி தொடர்பில் யாருடைய துணை கொண்டு அழுத்தம் பிரயோகிக்கின்றார்?

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் South China Morning Post பத்திரிகைக்கு கருத்து வௌியிட்ட மஹிந்த ராஜபக்ஸ, தமது தோல்விக்குப் பின்னால் இந்தியாவின் ரோ அமைப்பு இருப்பதாகக் கூறினார்.

இந்த செய்தி இந்திய பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டது.

இந்தியா தம்மை தோற்கடித்ததாகக் கூறி வந்த மஹிந்த ராஜபக்ஸ தற்போது இந்தியாவுடன் செய்து வருகின்ற கொடுக்கல் வாங்கல் என்ன?

மஹிந்த ராஜபக்ஸ மாத்திரம் அல்லாது இலங்கை பாராளுமன்றத்தின் முக்கிய பதவிகளில் உள்ள பலர் தற்போது இந்தியாவில் இருக்கின்றனர்.

இந்தக் குழுவில் அடங்குகின்ற சபாநாயகர் கரு ஜயசூரிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கயந்த கருணாதிலக்க , மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா , விஜித ஹேரத் ஆகியோரும் இந்தியாவிற்கு சென்ற இலங்கை பிரிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

நாட்டின் உயர் மட்ட அரசியல்தலைவர்கள் இந்தியாவுடன் இவ்வாறு செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்திய எண்​ணெய் நிறுவனம் தொடர்ந்தும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட கூடுதல் விலைக்கு பெட்ரோலை விறபனை செய்து வருகின்றது.

நேற்று (10) இரவு மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்திற்கு அமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரை லங்கா IOC நிறுவனம் ஒரு ரூபா அதிகமாக விற்பனை செய்கின்றது.

யூரோ ஃபோ பெட்ரோல் ஒரு லிட்டரையும் அவர்கள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விட 3 ரூபா அதிகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, விலை சூத்திரத்துடன் தாம் தொடர்புபடவில்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய, சந்தை விலையை நிர்ணயித்துக் கொள்வதாகவும் இந்திய எண்ணெய் நிறுவனம் சுட்டிக்காட்டியது.

இத்தகைய மோசமான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டு எண்ணெய் சந்தைக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்தியாவிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்குமாயின், எதிர்காலத்தில் நாட்டின் எரிசக்தி சந்தையை நிர்வகிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு கிடைக்கப் போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே இயற்கை திரவ வாயு மத்திய நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட பிரமாண்டமான எரிசக்தி விநியோக சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.

இலங்கை இந்த பின்புலத்தில் இருக்கும் போது, நேபாளம் இந்தியப் பிடியில் இருந்து விடுபடுவதற்கான மூலோபாயங்களைப் பின்பற்றி வருகின்றது.

இதுவரைக் காலமும் நேபாளத்தின் பிரதான விநியோகப் பாதை இந்தியா ஊடாவே அமைந்திருந்தது.

தற்போது அவர்கள் இந்தியாவை விடுத்து நான்கு சீன துறைமுகங்களைப் பயன்படுத்தி தமது விநியோகப் பாதையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு புறம் நாட்டின் அரசியலுக்கும் மறுபுறம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அழுத்தம் பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பத்தை வேறு ஒரு நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்