உண்மைக்கு புறம்பான கருத்துகளுக்கு கண்டனம்

தேசிய பாதுகாப்பு குறித்த உண்மைக்கு புறம்பான கருத்துகளுக்கு கண்டனம் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

by Staff Writer 10-09-2018 | 8:53 PM
Colombo (News 1st) தேசிய பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், முப்படையினர் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசியல் இலாபமீட்டும் வகையில் சில தரப்பினர் பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இவ்வாறானவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பொய்யான விடயங்களை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை மற்றும் விசேட விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு விடயங்களை மீளாய்வு செய்து மட்டும் தீர்மானம் எடுப்பதாகவும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட மற்றும் வேறு நோக்கங்களுக்கான குழுவினர் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சமூகத்திற்கு தவறான தகவல்களை வழங்க முயற்சிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்படையினர் யுத்தத்திற்கான பலத்தை தொடர்ந்தும் பேணுவதற்கு அவசியமான போர்ப் பயிற்சி செயற்றிட்டங்களுக்கு பூரண அனுசரணை மற்றும் ஒதுக்கீட்டினை அதிகளவில் வழங்கவுள்ளதாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.