ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிணையில் விடுதலை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல்: ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிணையில் விடுதலை

by Staff Writer 10-09-2018 | 7:38 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று (10) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சமர்ப்பித்திருந்த பிணை மனு, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 100 இலட்சம் பெறுமதியான 3 சரீரப்பிணைகளின் ஊடாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை பிணையில் விடுவிக்க, கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம உத்தரவிட்டார். பிணை வழங்குபவர்களில் ஒருவர் அரச சேவையின் நிறைவேற்று அதிகாரியாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதேநேரம், வௌிநாடு செல்வதற்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடந்த வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதி சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியின் கூற்றில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக, 8ஆவது சந்தேகநபரான அமல் கருணாசேகரவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய, இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்ய வேண்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது. இந்தநிலையில், எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.