இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள்குழு இந்தியா விஜயம்

இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியாவிற்கு விஜயம்

by Staff Writer 10-09-2018 | 8:35 PM
இந்திய அரசாங்கத்தின் அழைப்பையேற்று இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்கு சென்றுள்ளது. இதேவேளை, பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கலாநிதி சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனது வியட்நாம் விஜயத்தின் பின்னர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஐ.தே.க விலிருந்து கயந்த கருணாதிலக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ​ஹேரத், ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கிம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா உள்ளிட்ட குழுவினர் தற்போது புதுடில்லியில் உள்ளனர். இவர்கள் இன்று (10) முற்பகல் இந்திய பிரதமர் நரேந்திர ​மோடியை சந்தித்துள்ளனர். அதனையடுத்து, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தன் பின்னர் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துள்ளனர். இதேவேளை. பா.ஜ.க வின் மாநாடொன்றில் உரையாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் விஜயத்தில் இணைந்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் வௌிவிவகார விடயங்களில் இந்தியாவின் தலையீடு தொடர்பில் பல உதாரணங்களை குறிப்பிட முடியும். கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம், மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி மற்றும் திருகோணமலை எரிபொருள் தாங்கித் திட்டம், காங்கேசன்துறை துறைமுகத் திட்டம் என்பவற்றை கைப்பற்றும் நோக்கில் இந்தியா பல்வேறு முயற்சிகளை ​மேற்கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நேபாளத்தில் இடம்பெற்றதை போன்று இந்தியா இலங்கையில் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை இதன்மூலம் புலனாகின்றது. 1987 ஆம் ஆண்டு இந்தியா பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பும் வகையில் செயற்பட்டு அதன்மூலம் நாட்டின் அரசியலில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியது. 1980 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிகாலத்தில் இந்திய அமைதிகாக்கும் படை நாட்டில் இருந்து வௌியேற்றப்பட்டது.