கடலில் எண்ணெய் கலந்தமைக்கு எதிராக சட்டநடவடிக்கை

முத்துராஜவெல எண்ணெய்க் கசிவு: கடலில் எண்ணெய் கலந்தமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

by Staff Writer 09-09-2018 | 9:39 PM
Colombo (News 1st) கடலிலிருந்து முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருள் கொண்டுசெல்லப்பட்டும் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, தொன் கணக்கான எண்ணெய் கடலில் கலந்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இலங்கை கடற்பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து எண்ணெயை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள் கொண்டு வரப்பட்ட கப்பலிலிருந்து அவை இறக்கப்படும் சந்தர்ப்பத்தில் குழாயில் கசிவு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், குழாயில் ஏற்பட்ட கசிவு நேற்று (08) நண்பகல் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், திக்கோவிட்ட - தல்தியவத்த மற்றும் உஸ்வெலகெய்யாவ உள்ளிட்ட கடற்பரப்புக்களில் எண்ணெய் படிந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
மூன்று நாட்களுக்குள் அந்தக் கப்பலிலிருந்து நாட்டிற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். 3 அல்லது 4 நாட்களுக்குள் இந்த கடலில் ஏற்பட்டுள்ள நிலைமையை மாற்றி வழமை நிலைக்குக் கொண்டுவர முடியும். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. மின் உற்பத்திக்குக் கொண்டுவரப்பட்ட எண்ணெய்க்கே இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான எண்ணெய் போதுமானளவு கையிருப்பிலுள்ளது
என பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்குச் செல்ல முடியுமா என்பது தொடர்பில் நாம் மக்களுக்கு அறிவிப்போம். அதுவரை அந்தக் கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். அந்த எண்ணெயில் காணப்படும் விஷத்தன்மை பாதிப்பு ஏற்பட முடியும். அதேபோன்று அந்தப் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட முடியும். அந்த பாதிப்புக்கள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஆராயப்படும். இந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாம் செயற்பட்டுள்ளது
என சமுத்திர பாதிகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.
அதேநேரம், இது மிகவும் பழைமையான குழாய். அதனைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போதைக்கு பிரச்சினையில்லை. கடலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் காணப்பட்டது. அதனைத் தடுக்க முடிந்துள்ளது. சில குழாய்கள் 60, 70 வருடங்கள் பழமையானவை. இவற்றுக்கு விலை மனு கோரியுள்ளோம். நிதியை கோரியுள்ளோம். இது மிகவும் முக்கியமானதொன்று. குழாய்க் கட்டமைப்பை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும்
என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இந்தக் குழாய்களில் கசிவுகள் ஏற்பட்டன. 6 வருடங்களுக்கு முன்னர் இந்தக் குழாய்க் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. இது புதிய குழாய்க் கட்டமைப்பு. ஒரு மாதத்திற்கு மேலாக புதிதாகக் கொண்டுவந்த குழாய்களை புதிதாக பொருத்துவதைத் தாமதமாக்கியுள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் கசிவு காணப்படுகின்றது என எமது ஊழியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், அந்த கசிவு காணப்படுகையில் கிறிஸ் பூசி பூசி பயன்படுத்தினர். பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில், நிறுவனத்தில் குறைபாடுகள் காணப்படுமாயின், அதனை நாட்டிற்குக் கூறுவது எமது பொறுப்பாகும்
என ஶ்ரீ லங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன்குமார தெரிவித்தார்.