இராணுவ தலைமைத்துவம் விமர்சிக்கப்படுவதற்கு கண்டனம்

பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமைத்துவம் விமர்சிக்கப்படுவதற்குக் கண்டனம்

by Staff Writer 09-09-2018 | 2:44 PM
Colombo (News 1st) அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ​தேசிய பாதுகாப்பை அடிப்படையாக வைத்து, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமைத்துவம் விமர்சிக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்தும் வகையில் இராணுவ தலைமை அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தாம் திருப்தியடைவதில்லை என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலர் அண்மையில் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், ஓய்வுபெற்று பல வருடங்கள் கடந்த பின்னர், இராணுவ பலம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லையென இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், தேவையான சந்தர்ப்பங்களில் முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளிடம் கருத்துக்களைப் பரிமாறி இராணுவத்தை பலப்படுத்துவதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறு இடம்பெறும் எனவும் இராணுவ தலைமையகம் குறிப்பிடுகின்றது. 30 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை இராணுவம், யுத்தத்தை வெற்றிகொண்டு 9 வருடங்கள் கடந்துவிட்டது எனவும் அந்த 9 வருடங்களில் அனுபவம் கொண்ட இராணுவ தளபதிகள் நால்வர் இராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கை இராணுவத்தின் யுத்த ஏற்பாட்டு நிலைமையைப் பலப்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன், அரச அனுசரணையுடன் பல இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன்மூலம் சர்வதேச இராணுவ செயற்பாடுகளை புரிந்து கொண்டுள்ளதாகவும் இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.