காணாமலாக்கப்பட்டோர் உறவுகளை சந்தித்த மக்கள் சக்தி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 09-09-2018 | 8:15 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் வருகைக்காக காத்திருக்கும் மக்களை நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் இன்று (09) சந்தித்தனர். திருகோணமலைக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினரின் பயணம் கிண்ணியா சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. கிண்ணியா சித்திவிநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவதற்கான சந்தர்ப்பத்தை கோவில் நிர்வாகிகள் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினருக்கு வழங்கியிருந்தனர். தொடர்ந்து, கிண்ணியா ஆலங்கேணியை நோக்கி பயணத்தை முன்னெடுத்த மக்கள் சக்தி குழுவினர், தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் வாழ்வில் எவ்வித பிடிமானமும் இன்றி முன்னெடுத்துவரும் மக்களை சந்தித்தனர். இந்த மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப் பிரச்சினை, மீள்குடியேற்றப் பிரச்சினை மற்றும் மயானம் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பிலும் மக்கள் சக்தி குழுவினர் அவதானம் செலுத்தினர். அதேநேரம் ஈச்சந்தீவு, இடிமண், காக்காமுனை மற்றும் சின்னநகர் ஆகிய பகுதிகளுக்கும் மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர். பாரிய நீர்த்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சின்னநகர் பகுதி மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக 300 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள காக்காமுனை கிராமத்திற்கே செல்கின்றனர். குழாய் மூலம் குடிநீரைப் பெற்றுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சிறுநீரக நோய்க்கு உள்ளாகியுள்ள மக்களுடனும் இல்லங்கள் தோறும் குழுவினர் கலந்துரையாடினர். இதனையடுத்து, வீரமாநகர் பகுதிக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்றனர். யுத்தம் காரணமாக 2006 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் 2008 ஆம் ஆண்டில் மீளக்குடியமர்ந்த நிலையில் அவர்களுக்கான சமுர்த்தி மறுக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக நீர் குழாயைப் பெறுவதற்கு அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. கூலி வேலை செய்து வாழ்வியலை முன்னெடுக்கும் இவர்களுக்கு 24,000 ரூபா செலுத்தி நீர்க்குழாயை அமைக்க முடியாத நிலையில், 215 குடும்பங்கள் வாழும் இந்தக்கிராமத்தில் 45 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிறுநீரக நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.  

ஏனைய செய்திகள்