ரஜினியின் பேட்டயும் நில அரசியல் பேசுமா?

ரஜினியின் பேட்டயும் நில அரசியல் பேசுமா?

by Bella Dalima 08-09-2018 | 5:00 PM
கபாலி, காலா படங்களைத் தொடந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்திலும் நில அரசியல் பற்றி பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த்,‌ ஷங்கர் இயக்கும் 2.0 படம் தயாரிப்பில் இருக்கும்போதே, பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என 2 படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து கட்சி ஆரம்பித்து அரசியலில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்த்த போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமானார். ரஜினியோடு விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் என்று முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து இந்தப் படத்திற்காக பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோ‌ஷன் போஸ்டரை படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்திற்கு “பேட்ட” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்‌‌ஷன் காட்சியில் ரஜினி என்ட்ரி கொடுப்பது போல் மோ‌ஷன் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் ரஜினியின் தோற்றம் அமைந்துள்ளது. கபாலி, காலா என இரு படங்களும் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களாக வெளியாகியிருந்தன. ‘பேட்ட’ என்கிற பெயரும் நிலம் சார்ந்த பெயராக இருப்பதால் படத்தின் கதைக்களம் மீண்டும் நில அரசியலை மையமாகக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.