வெறுமையாய்த் தோன்றும் வவுனியா கிராமங்கள்

மக்கள் சக்தி: வெறுமையாய்த் தோன்றும் வவுனியா கிராமங்கள்

by Staff Writer 08-09-2018 | 8:25 PM
Colombo (News 1st) நாகரிக வளர்ச்சியில் உலகம் வேக நடை போடும் காலத்திலும் மலசல கூட வசதியின்றி அல்லலுறுபவர்களை மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் இன்று சந்தித்தனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டக்குழுவினர் இன்றும் வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். வவுனியா மாவட்டத்தின் சிதம்பர நகருக்கு நியூஸ்ஃபெஸ்ட்டின் ஒரு சாரார் விஜயம் செய்திருந்தனர். முதலாது அகதிகள் முகாம் அமைக்கப்பட்ட சிதம்பர நகர் மக்கள் இன்றும் அகதிகள் போன்றே தமது வாழ்வியலை முன்னெடுத்துச் செல்கின்றனர். 208 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 40 மலசலக்கூடங்களே உள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டனர். கல்சியம் கலந்த குடிநீரை பருகுவதால் சிதம்பரநகர் கிராமத்தில் 68 பேர் வரை சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வறட்சியின் கொடுமையால் கிணறுகள் வற்றி, மக்களும் கால்நடைகளும் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதுடன், வீட்டுத்திட்டங்களும் இவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஜேசுபுரம் , கற்குளம் ஆகிய கிராமங்களுக்கும் நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழாத்தினர் விஜயம் மேற்கொண்டு மக்களின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். குடிநீர் , போக்குவரத்து மார்க்கம் இன்றி பெரும் இன்னல்களுக்கு இந்தக் கிராம மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இதேவேளை, நியூஸ்ஃபெஸ்டின் மற்றுமொரு குழுவினர் ஸ்ரீபோதி தக்ஷிலா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் தமது பயணத்தை முன்னெடுத்தனர். அவரந்துலாவ கிராமத்திற்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினரை வெறுமையான வீடுகளே வரவேற்றன. கடும் வறட்சி மற்றும் அடிப்படைத் தேவைகள் ஏதும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் குறித்த வீடுகளை விட்டு மக்கள் இடம்பெயர்ந்து வேறு கிராமங்களுக்கு சென்றுள்ளனர். குடிநீர் இன்றிய நிலையில் வாழ்வாதாரம் இன்றி இந்தக்கிராமம் வெறுமையை எதிர்நோக்கியுள்ளது. தொடர்ந்தும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டக்குழுவினர் பளையூர் மற்றும் பூமடுவ ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தனர்.