நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நல்லையம்பதி நாயகன் இரதமேறி அருள் பாலித்தார்

by Staff Writer 08-09-2018 | 8:39 PM
Colombo (News 1st)  வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் இரதோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நல்லூர் கந்தன் தேரேறி திரு வீதி வலம் வரும் அழகைக் காண்பதற்காய் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் இன்று கூடியிருந்தனர். ஈழத்தின் குடும்ப விழாவான நல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்சவம் இன்று நடைபெற்றது. அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் எம்பெருமானுக்கு அதிகாலை முதல் பூஜைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டபப் பூஜைகள் இடம்பெற்றன. பிராமண உத்தமர்களின் வேதமந்திர உச்சாடனமும் மங்கள வாத்தியங்களும் முழங்க, பக்தர்களின் அரோஹரா கோஷம் கடலலையை விஞ்சி ஆர்ப்பரிக்க, காண்டாமணியோசை அணி செய்ய, நல்லையம்பதியின் நாயகன் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதரராக வௌி வீதி எழுந்தருளினார். நல்லையம்பதியில் திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பிரவாகத்தில் திளைக்க, எம்பெருமான் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் ஆரோகணிக்கப்பட்டார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முருகப்பெருமான் கம்பீரமாக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி புரிந்தார். வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.