சம்பந்தனும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியும் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஐ.நா.வின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

by Staff Writer 08-09-2018 | 7:23 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையிலான இந்த சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார். நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது ஐ.நா பிரதிநிதிக்கு தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்டோர் , அரசியல் கைதிகள், காணிகள் விடுவிக்கப்படாமை போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி, நிரந்தரமான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்தும் பாரிய பணியில் ஐ.நா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படுமென ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் (David McKinnon) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.