1983-1990 வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு

1983-1990 வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 07-09-2018 | 8:34 PM
Colombo (News 1st) 1983 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதிப்புகளுக்குள்ளான மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலொன்று இன்று வவுனியாவில் நடைபெற்றது. Transparency International-இன் வழிநடத்தலில் இயங்கும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிகப் பணிப்பாளர், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 1983 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வவுனியா கூமாங்குளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக நட்ட ஈடு பெற்றுக்கொள்ளும் நோக்கிலான உதவிகளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை மையம் செய்து வருகின்றது. இந்த கலந்துரையாடலின்போது நட்ட ஈட்டினை எதிர்பார்த்திருக்கும் மக்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் நட்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 27 குடும்பங்களுக்கு நட்ட ஈடும் வழங்கப்பட்டுள்ளது.