நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவிப்பு

ராஜிவ் காந்தி கொலை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு

by Bella Dalima 07-09-2018 | 4:20 PM
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பில் பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியமை வரவேற்கத்தக்கது என திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யும் விடயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசியல் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.