சிறுநீரக நோய்களுக்குள்ளாகும் வவுனியா மக்கள்

மக்கள் சக்தி: குடிநீர் பிரச்சினையால் சிறுநீரக நோய்களுக்குள்ளாகும் வவுனியா மக்கள்

by Staff Writer 07-09-2018 | 8:31 PM
Colombo (News 1st)  அன்றாட குடிநீர்த் தேவைக்காக வாழ்வியல் போராட்டங்களை எதிர்நோக்கும் பலர் இன்றும் எம்மத்தியிலுள்ளனர். அவ்வாறானவர்களை ''மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்'' குழுவினர் இன்று சந்தித்தனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 11 ஆவது நாளான இன்று வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் பயணித்தனர். வவுனியா - சித்திவிநாயகர் ஆலயத்திற்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அக்போபுர பகுதிக்கு விஜயம் செய்த நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். நுண் கடன்களைப் பெற்று இந்த பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடும் வறட்சி காரணமாக குடிநீர் இன்றிய நிலையில், சிறுநீரக நோய்க்குள்ளாகியுள்ளதாக அக்போபுர கிராம மக்கள் தெரிவித்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மாமடு சிறுநீரக வைத்தியசாலையின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நாமல் கம பகுதிக்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் சென்று, அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். குடிநீரின்றி நாமல் கம மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களோ ஏராளம். இதேவேளை, நியூஸ்ஃபெஸ்டின் மற்றுமொரு குழுவினர் வவுனியா - மணிபுரம் கிராமத்தை நோக்கி தமது பயணத்தை முன்னெடுத்திருந்தனர். இங்கும் குடிநீர் பிரச்சினையால் 8 பேர் சிறுநீரக நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதுடன், கடந்த வருடமும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கணேசபுரம் கிராமத்திற்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர் அங்குள்ள போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். சமயபுரம் கிராம மக்கள் நிரந்தர வீடுகள் இன்றித் தவிப்பதுடன், வறுமையின் பிடியிலும் சிக்கியுள்ளனர்.