Colombo (News 1st) ஈழத்தின் குடும்ப விழாவான நல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா நடைபெற்றது.
22 நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆம் நாளாகிய இன்று சப்பரத் திருவிழா பக்தர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
கோபுரத்தை ஒத்த மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்திய முழக்கத்துடன் ஆலயத்தின் வெளிவீதியில் நல்லைக் கந்தனின் சப்பரத்திருவிழா நடைபெற்றது.
அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தன் வள்ளி, தெய்வானை சமேதரராய் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்தார்.
நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் நாளை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அலங்காரக் கந்தனின் மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு நியூஸ்ஃபெஸ்டின் சிறப்பு கலையகமான கந்தக்கோட்டம் இன்று திறந்துவைக்கப்பட்டது.
நிதா காசானந்தா சுவாமிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப்பணிப்பாளர் சாந்தி பகிரதன், சக்தி FM அலைவரிசைப் பிரதானி ஆர்.பி. அபர்ணா சுதன், தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரிகள், நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் கந்தக்கோட்டம் கலையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கந்தக்கோட்டம் கலையகத்தில் குரல் தேர்வு மற்றும் குரல் பரீட்சைகள் இன்றைய தினம் நடைபெற்றன.
நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) வரை நியூஸ்ஃபெஸ்ட்டின் குரல் தேர்வு மற்றும் திரைப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதன்போது தெரிவு செய்யப்படுகின்ற இருவருக்கு சக்தி TV மற்றும் சக்தி FM-இல் நாளை மறுதினம் மணித்தியாலச் செய்திகளை வாசிப்பதற்கான அரிய வாய்ப்பு கிட்டவுள்ளது.