by Staff Writer 06-09-2018 | 9:57 PM
Colombo (News 1st) மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குழந்தையின் இதயத்துடிப்பு குறைவடைந்ததை அடுத்து, விசேட மருத்துவப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் தந்தை, பிரசவ விடுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரி மற்றும் காவலாளியைத் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மன்னார் பொது வைத்திய சேவையின் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.