மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணி விடுவிப்பு

மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் அமைந்துள்ள காணி விடுவிப்பு

by Staff Writer 06-09-2018 | 4:25 PM
Colombo (News 1st)  யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் அமைந்துள்ள காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் காணி உரிமம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வலி. வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் மயிலிட்டி வாழ் மக்கள், குறித்த பாடசாலை மாணவர்கள், வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த பாடசாலை 1818 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி குறித்த பாடசாலை மற்றும் காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக மல்லாகம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் மாலை நேர பாடசாலையாக இயங்கி வந்தது. இதனையடுத்து, 1996 ஆம் ஆண்டிலிருந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள தற்காலிகக் கொட்டகையில் குறித்த பாடசாலை இயங்கி வந்தது. தற்போது தரம் ஒன்று முதல் தரம் 11 வரை வகுப்புகள் இயங்குவதுடன், 182 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.