குடிநீரைப் பெற சிரமப்படும் முல்லைத்தீவு மக்கள்

மக்கள் சக்தி: குடிநீரைப் பெற சிரமங்களை எதிர்கொள்ளும் முல்லைத்தீவு மக்கள்

by Bella Dalima 05-09-2018 | 7:59 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்றும் சென்றிருந்தனர். சுத்தமான குடிநீரைப் பெற அல்லலுறும் மக்கள் வாழும் மற்றுமோர் கிராமமே மூங்கிலாறு. இங்குள்ள 75 குடும்பங்களில் ஒரு சிலரின் வீட்டிலேயே கிணறுகள் காணப்படுகின்றன. சிலர் அகழப்பட்ட குழிகளிலிருந்து பெறப்படும் நீரை அருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏனையோர் பொதுக்கிணறை நாட வேண்டிய நிலையில் உள்ளனர். அங்கு பெறப்படும் நீரும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. மூங்கிலாறு - மல்லிகைத்தீவு - 9 ஆம் வட்டாரத்தில் 35-க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. சட்டவிரோத மதுபான உற்பத்தியினால் பல்வேறு அசௌரிகரியங்களை எதிர்நோக்குவதாக இங்குள்ள மக்கள் கூறினர். 200-ஆம் குடியேற்றம் பகுதியிலுள்ள 45-க்கும் அதிகமான குடும்பங்கள், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளன. மிக ஆழமான கிணறொன்றிலிருந்து இவர்கள் பெறும் நீரும் குடிப்பதற்கு ஏதுவாய் இல்லை. நெத்தலியாறு கிழக்கில் உள்ளக வீதிகள் பல வருடங்களாக புனரமைக்கப்படாதுள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டனர். நிரந்தர வீடுகள் இன்றி தற்காலிக இருப்பிடங்களில் வாழும் மக்களையும் இந்த பகுதியில் இல்லங்கள் தோறும் குழுவினர் சந்தித்தனர். குடிநீரைப் பெறுவதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இவர்கள், பாதுகாப்பற்ற கிணறுகளிலிருந்து நீரைப் பெற முயற்சிக்கின்றனர். கிணறுகளின் ஓரமாக மண் சரிந்து விழக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது. விசுவமடு - தொட்டியடி கிராம மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் தொடர்ந்தும் அல்லலுறுகின்றனர். யானை வேலி அமைக்கப்பட வேண்டும் என்ற பல வருட கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சுமார் 30 மாணவர்கள் கல்வி பயிலும் தொட்டியடி முன்பள்ளி சிறிய இடமொன்றிலேயே இயங்கி வருகிறது. முன்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கொண்டுவரும் குடிநீர் தீர்ந்தால், அதற்கு எந்தவித மாற்றீடும் இல்லை. உடையார்கட்டு பகுதியில் உள் வீதிகள் புனரமைக்கப்படாதுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.