ஆசிய போட்டிகளில் ஆபிரிக்கர்கள் ஆதிக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆபிரிக்கர்களின் ஆதிக்கம்: புதிய விதிமுறைகளை அமுல்படுத்தியது சம்மேளனம்

by Staff Writer 05-09-2018 | 7:20 PM
Colombo (News 1st)  ஒரு நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் வசித்த வீர, வீராங்கனைகள் மாத்திரமே அந்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற முடியும் என்ற புதிய விதிமுறையை சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனம் அமுல்படுத்தியுள்ளது. ஆசிய விளையாட்டு விழாவில் ஆபிரிக்க வீர, வீராங்கனைகள் பதக்கங்களை வென்றதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆசிய விளையாட்டு விழாவில் பஹ்ரெய்ன் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்காக ஆபிரிக்க வீர, வீராங்கனைகள் பங்கேற்று 16 தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர். இதனால் இந்தியா வெல்ல வேண்டிய 7 தங்கப்பதக்கங்களை இழந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடவருக்கான 100, 200, 1500, 3000, 5000 மற்றும் 10,000 மீட்டர், மரதன் போட்டிகளில் பஹ்ரெய்ன் தங்கப்பதக்கங்களை வெற்றி கொண்டது. எனினும், அந்தப் பதக்கங்களை நைஜீரியா, எத்தியோப்பியா, மொராக்கோ, கென்யா ஆகிய ஆபிரிக்க நாடுகளின் வீர, வீராங்கனைகளே பஹ்ரெய்னுக்கு வென்று கொடுத்தனர். மகளிருக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பஹ்ரெய்ன் குழாம் தங்கப்பதக்கம் வென்ற போதிலும், அந்தக் குழாத்தில் பஹ்ரெய்னின் ஒரு வீராங்கனை மாத்திரமே இடம்பெற்றிருந்தார். ஏனைய மூவரும் ஆபிரிக்கர்கள் என்பதுடன் கலப்பு 4X400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பஹ்ரெய்னுக்கு ஆபிரிக்க வீர, வீராங்கனைகளே தங்கப்பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தனர். அவ்வாறே, 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டம், ஆடவருக்கான சம்மட்டி எறிதல், ஆடவருக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் கட்டார் தங்கம் வென்ற போதிலும் அதனை சூடான், எகிப்து போன்ற ஆபிரிக்க நாடுகளின் வீர, வீராங்கனைகளே வென்று கொடுத்துள்ளனர். சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனத்தின் புதிய விதிமுறைகளுக்கு அமைவாக, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த சுமார் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 20 வயதுக்கு குறைந்த எவரும் பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகள் சார்பாக பங்கேற்க முடியாது என்ற விதியும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.