சிறை மோதல்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை மோதல்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

by Staff Writer 04-09-2018 | 3:34 PM
Colombo (News 1st)  வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கியை, அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அது குறித்த அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இதனடிப்படையில், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள், கைதிகள் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.