இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வட மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 04-09-2018 | 3:44 PM
Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில், இன்று வட மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். தனியார் பஸ்கள் மாத்திரமே அனைத்து பகுதிகளிலும் சேவையில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். வவுனியா மாவட்டத்தில் தூர சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுகின்றன. மன்னார் மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் கிராமத்திலுள்ள மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திலும் தனியார் பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளன. இதேவேளை, கேகாலை மற்றும் பலாங்கொட டிப்போக்களில் இருந்து புறப்படும் அனைத்து பஸ்களும் சேவையில் இருந்து விலகியுள்ளன. சம்பளத்தை அதிகரிக்கக் கோரி தென் மாகாண டிப்போ ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (28) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.