வறட்சியால் அல்லலுறும் கிளிநொச்சி மக்கள்

மக்கள் சக்தி: வறட்சியால் அல்லலுறும் கிளிநொச்சி மக்கள்

by Staff Writer 04-09-2018 | 8:08 PM
Colombo (News 1st) நீரின்றி அமையாது உலகு என்பது ஆன்றோர் வாக்கு. நாற்புறமும் நீரால் சூழப்பட்ட இலங்கைத் தீவில் ஒரு கோப்பை குடிநீரைப் பெற பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் மக்களை 'மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்' குழுவினர் இன்று சந்தித்தனர். கிளிநொச்சி - பச்சிலைப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதிக்கு விஜயம் செய்த நியூஸ்ஃபெஸ்ட் மக்கள் சக்தி குழாத்தினர், அந்தப் பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டனர். தமது அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தாம் அல்லலுறுவதாக இங்குள்ள மக்கள் கவலை வௌியிட்டனர். இதேவேளை, அறத்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்படாத நிலையில், மலசலக்கூட வசதிகளும் இன்றி பெரும் இன்னல்களுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இதேவேளை, நியூஸ்ஃபெஸ்டின் மற்றுமொரு குழாத்தினர் கரைச்சி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முறிப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். சுமார் 250-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் முறிப்பு பகுதியில் மக்கள் பாரிய நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். அரைக்கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிணறு ஒன்றிலிருந்து மக்கள் குடிநீரைப் பெற்று வருகின்ற போதிலும், குறித்த கிணறும் தற்போது வற்றிப்போயுள்ளதால் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். இதர தேவைகளுக்காக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முறிப்புக் குளத்திற்கு சென்று நீரைப் பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுவதாக முறிப்பு பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, 12 குடும்பங்கள் வசிக்கும் ஊற்றுப்புலம் பகுதிக்கு பிரதேச சபையால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை 2000 லிட்டர் நீர் வழங்கப்படுகின்ற போதிலும், அவை தமக்கு போதுமானதாக இல்லை என மக்கள் குறிப்பிட்டனர். வள்ளுவர் பண்ணை மற்றும் நாவலர் பண்ணை ஆகிய பகுதிகளுக்கும் மக்கள் சக்தி குழாத்தினர் இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். பிரதேச சபையால் வழங்கப்படும் குடிநீர் கடந்த மூன்று நாட்களாக வழங்கப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர். கோணாவில் கிழக்கிற்கு சென்ற மக்கள் சக்தி குழாத்தினர், அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். 200-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் வற்றிப்போயுள்ள நிலையில், மக்களும் கால்நடைகளும் குடிநீரின்மையால் பெரும் இன்னல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. தொடர்ந்து அக்கராயன் மற்றும் ஹரிதாஸ் ஆகிய கிராமங்களுக்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் விஜயம் மேற்கொண்டனர்.