இடையூறு ஏற்படுத்தினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி பொலிஸ் மா அதிபர்

by Staff Writer 04-09-2018 | 7:17 PM
Colombo (News 1st)  அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கும் பாடசாலை மாணவர்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஒலிபெருக்கி பயன்பாடு, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை முன்னெடுத்தல் போன்றவற்றின் போது, பொலிஸ் ஒழுக்கக்கோவைக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அமைதியான முறையில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களாயின், இலங்கை பொலிஸாரின் பூரண ஒத்துழைப்பு அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார். திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் விடயம் தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்ததாகவும் அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், குற்றவியல் நடவடிக்கையின் போது முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர்  மேலும் தெரிவித்தார்.