பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றங்கள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாளை எதிர்ப்புப் பேரணி: பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றங்கள்

by Staff Writer 04-09-2018 | 8:38 PM
Colombo (News 1st)  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் நாளை (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பில் மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் இன்று நீதிமன்றத்தை நாடினர். இந்த எதிர்ப்பு பேரணியில் இணைந்துகொள்வோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசிக்கும் மலலசேகர வீதியிலுள்ள வீட்டை முற்றுகையிடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 11 பிரதிவாதிகளின் பெயர் குறிப்பிட்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு - மலலசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை சுற்றிவளைத்து, ஜனாதிபதியை வீட்டினுள் முடக்குவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். யாரேனும் ஒருவர் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை சுற்றிவளைக்க முயற்சிப்பாராயின் அந்த நடவடிக்கையானது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி முயற்சி என்பதால், அவ்வாறான முயற்சிகளை முறியடிப்பதற்கு பொலிஸாருக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும், அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் இல்லை எனவும் கொழும்பு பிரதம நீதவான் அறிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளமைக்கான உறுதியான ஆதாரங்கள் இருக்குமாயின், அவர்களை நாளை கைது செய்வதற்கான தேவை இல்லை என அறிவித்த நீதவான், அந்த நபர்களை இன்றே கைது செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொல்துவ சந்தியூடாக தியத உயன மற்றும் பொல்துவ சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளூடான பிரதான வீதிக்குள் பிரவேசித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செற்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு கோரி வெலிக்கடை பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வாவிடம் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் பிரவேசித்து மக்களுடன் முரண்படக்கூடும் என தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கொள்ளுப்பிட்டி பொலிஸார், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். எனினும், இந்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்ததுடன், இதற்கு முன்னர் இடம்பெற்ற பேரணிகளின் போது இவ்வாறான மோதல்கள் இடம்பெற்றனவா என கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறான சம்பவங்கள் ஏற்படுமாயின் பொலிஸாருக்கு காணப்படும் கொள்கைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.