UPDATE : 07 யானைகளில் 05 யானைகளின் உடல்கள் மீட்பு

UPDATE : பொலன்னறுவையில் உயிரிழந்த 07இல் 05 யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

by Staff Writer 03-09-2018 | 5:05 PM

பொலன்னறுவை - பெரியாறு புதூர் பகுதியிலுள்ள சதுப்பு நிலத்தில் சிக்குண்டு இறந்த ஏழு யானைகளில் ஐந்து யானைகளுடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மகாவலி கங்கையின் பிரதான கிளையாறான பெரியாறு அமைந்துள்ள பொலன்னறுவை - புதூர் பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் சிக்குண்டதால் இந்த யானைகள் இறந்தன. நேற்றைய தினம் அவற்றை சதுப்பு நிலத்திலிருந்து மீட்பதற்கு முயற்சித்த போதும், அதற்கான வசதிகள் இன்மையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இன்று காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஐந்து யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். இதேவேளை, ஆற்றில் படிந்துள்ள பாசியை அகற்றும் பணிகளையும் இராணுவ்தினர் முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். சோமாவதி சரணாலயத்திலிருந்து நீரைத் தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு யானை பெரியாற்றில் மிதந்து கொண்டிருந்ததை நான்கு நாட்களுக்கு முன்னர் பிரதேச மக்கள் கண்டுள்ளனர். அன்றைய தினமே யானையை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை. மீன்பிடிப்பதற்காக சிலர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது, நான்கு யானைகளை கண்டுள்ளதுடன் அது தொடர்பில் வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். வன ஜீவராசிகள் அதிகாரிகள் அங்கு சென்றபோது, யானைகள் இறந்து காணப்பட்டன. பெரியாற்றில் பாசி படிந்துள்ளமையால் இவ்வாறு யானைகள் புதையுண்டதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.