மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை

மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் தடை

by Staff Writer 03-09-2018 | 5:26 PM

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விவசாயிகளால் மெரினா கடற்கரையில் தொடர்ந்து 90 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனுமதி கோரப்பட்டு தொடரப்பட்ட வழக்கில், தனிநீதிபதியால் வழங்கப்பட்ட அனுமதியையும் இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதையடுத்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தமிழக பொலிஸ் தடை விதித்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.