பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள மத்தியமாகாண வைத்தியர்கள்

மத்திய மாகாணத்தின் சகல வைத்தியசாலை வைத்தியர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட நடவடிக்கை

by Staff Writer 01-09-2018 | 8:29 AM
Colombo (News 1st) மத்திய மாகாணத்திலுள்ள சகல வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கலஹா பிரதேச வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்திய மற்றும் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், கலஹா வைத்தியசாலைக்கருகில் பொலிஸ் காவலரண் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கலஹா பகுதியில் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை குறித்த பொலிஸ் காவலரண் அங்கு செயற்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முதல் இந்த பொலிஸ் காவலரண் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைதியின்மையை ஏற்படுத்தி, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்காக 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கண்டி - கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையின் சொத்துக்களுக்கு மக்கள் சேதம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.