புற்றுநோய்க்கான மருந்துகளின் விலைகளில் மாற்றம்

புற்றுநோய், நீரிழிவுக்கான மருந்துகள் உட்பட வைத்திய உபகரணங்களின் விலை குறைவு

by Staff Writer 01-09-2018 | 1:23 PM
Colombo (News 1st) அதிக விலையில் விற்பனை செய்யப்படும் புற்றுநோய்க்கான 10 வகையான மருந்துப் பொருட்களின் விலையும் 25 மருத்துவ உபகரணங்களுக்கான விலையும் இன்று (01) முதல் குறைக்கப்படவுள்ளது. பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச மருந்தகக் கூட்டுத் தாபனத்தின் 39 ஆவது ஒசுசல கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது சுகாதார அமைச்சர், டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், புற்றுநோய்க்கான 13 ரகங்களை சேர்ந்த மருந்துகளின் விலைகளும் இன்று முதல் குறைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். அதற்கமைய, இன்று முதல் விலை குறைக்கப்படும் மருந்துப் பொருட்களுக்கான நிர்ணய விலையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தெரிவுசெய்யப்பட்டுள்ள 13 மருந்துப் பொருட்களுக்கான சில்லரை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நீரிழிவு நோய்க்கான குருதி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் மானி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் சில்லரை விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குருதியில் காணப்படும் குளுக்கோஸின் அளவை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மானி ஒன்றின் சில்லரை விலையான 2,750 ரூபாவிலிருந்து 48 வீதம் குறைக்கப்பட்டு 2,510 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நீரிழிவு நோயாளர்களுக்கான 10 மில்லிமீற்றர் அளவிலான இன்சுலின் ஊசியின் விலை 1,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 10 மில்லிமீற்றர் அளவிலான இன்சுலின் ஊசி 600 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்