கடிதங்களை பெற்றுக்கொள்ளாதோரின் நியமனங்கள் இரத்து

நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ளாத பட்டதாரிகளின் நியமனங்கள் இரத்து

by Staff Writer 01-09-2018 | 4:04 PM
Colombo (News 1st)  கடந்த 20 ஆம் திகதி அரச சேவையில் இணைவதற்கான பயிற்சியை பெற்ற பட்டதாரிகளில், இதுவரை நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்ளாதவர்களின் நியமனங்களை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் மூன்று நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்காக நேற்று (31) பிற்பகல் வரை, கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். வேலையற்ற பட்டதாரிகள் 4100 பேருக்கு அரச சேவையில் இணைவதற்கான பயிற்சிகள் கடந்த 20 ஆம் திகதி வழங்கப்பட்டது. மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமக்கான நியமனங்களை விரைவில் பெற்றுத்தருமாறு வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தினர். அதற்கமைய, அவர்களுக்கான நியமனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன சுட்டிக்காட்டினார். இதனிடையே, இரத்து செய்யப்பட்ட நியமனங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க மீள நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், அரச சேவையில் பட்டதாரிகள் 15,000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.