கோதுமை மா விலை அதிகரிப்பு

கோதுமை மா விலை அதிகரிப்பு

by Staff Writer 01-09-2018 | 7:17 PM
Colombo (News 1st) கோதுமை மாவின் விலை நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 100 ரூபாவாகும். உலக சந்தையில் விலை உயர்வடைந்தமை மற்றும் டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை ஆகிய விடயங்கள் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை எனவும் நிறுவனங்களின் தீர்மானத்திற்கு அமையவே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது. எவ்வாறாயினும், பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் கோதுமை மா இன்று காலை முதல் புதிய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. கோதுமை மாவின் விலை உயர்வடைந்துள்ளமையால், பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தோட்டப்பகுதி மக்கள் கோதுமை மாவையே அதிகளவில் உணவிற்கு பயன்படுத்துகின்றனர். இந்த விலை அதிகரிப்பு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடியாக்கியுள்ளது.