விஷவாயுவை வௌியேற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம

அபாயகரமான விஷ வாயுவை வௌியேற்றும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்

by Staff Writer 01-09-2018 | 9:50 PM
Colombo (News 1st)  சீனாவின் Peking மற்றும் அமெரிக்காவின் Yale பல்கலைக்கழகங்கள் இணைந்து முன்னெடுத்த ஆய்வில், வளி மாசடைதல் காரணமாக புத்தி சுவாதீனம் ஏற்படுதல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. 4 வருடங்களாக 20 ஆயிரம் பேரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் ஊடாக, நைட்ரஜன் டையொக்சைட் மற்றும் சல்பர் டையொக்சைட் ஆகியன அபாயத்தை ஏற்படுத்தும் முதன்மையான விச வாயுகள் என கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இரகசியமாக தனது விஷ வாயுவை வௌியிடும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. நிலக்கரியை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் அபாயகரமான விஷ வாயு சல்பர் டையொக்சைட் ஆகும். நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் சல்பர் டையொக்சைட் வாயு, வளிமண்டலத்துடன் கலப்பதை குறைக்கும் நோக்கில் FGD விசத்தன்மையுடைய சல்பர் வாயுவை சுத்திகரிப்பதற்கு 3 கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது மின் பிறப்பாக்கி திருத்தப்பணிகளுக்காக சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில், கவனயீனம் காரணமாக ஏற்பட்ட விபத்தினால் FGD விசத்தன்மையுடைய சல்பர் வாயு சுத்திகரிப்பு கட்டமைப்பு தீ பரவி சேதமடைந்தது. திருத்தப்பணிகளின் பின்னர் இந்த இரண்டாம் இல்ல மின்பிறப்பாக்கி தற்போது மீள செயற்படுத்தப்படுவதுடன், அதனால் சேதமடைந்த FGD கட்டமைப்பை சீர்செய்வதற்கு இதுவரையில் அதிகாரிகளால் இயலவில்லை. இதனால் விசத்தன்மையுடைய சல்பர் டையொக்சைட் வாயு நேரடியாகவே வளிமண்டலத்தை தற்போது சென்றடைகின்றது. அமில மழையை ஏற்படுத்தும் பிரதான காரணியாக சல்பர் டையொக்சைட் வாயு காணப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சல்பர் டையொக்சைட் காரணமாக ஏற்படும் அமில மழையினால், ஸ்ரீ மகா போதி, பழமைவாய்ந்த கோபுரங்கள் மற்றும் நீரேந்துப்பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சல்பர் டையொக்சைட் வாயு வளிமண்டலத்தில் கலப்பதை குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி ஊடாக 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாதுள்ளதாக, இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் சமன் லெனதுவ கூறினார். மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்க இயந்திரத்தில் 300 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்வதாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் அதிகாரிகள் கூறினர். நிலக்கரிகளை எரிக்கும் போது 1 மீட்டர் கியூபிக்கிற்கு 850 மில்லிகிராம் சல்பர் டையொக்சைடினை வளிமண்டலத்திற்கு விடுவிக்க முடியும் என வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையினால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறுதியாக வழங்கிய சுற்றாடல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. FGD கட்டமைப்பின்றி மின் உற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதாக இருந்தால், நிலக்கரிகளை எரிக்கும் போது 1 மீட்டர் கியூபிக்கிற்கு 1546 மில்லிகிராம் சல்பர் டையொக்சைட் வளிமண்டலத்திற்கு விடுவிக்கப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த சூழல் பாதிப்பிற்கு எதிராக செயற்பட வேண்டிய வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகளுடன் இணைந்து இந்த பிரச்சினையை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பது புலப்படுகின்றது. இதேவேளை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தரவை மீறி, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையை இரத்து செய்யுமாறு மழைக்காடுகளை பாதுகாப்பவர்களின் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் மாகாண சபையின் கீழ் செயற்படுத்தப்படும் ஒரேயொரு அதிகார சபையாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபை காணப்படுவதுடன், இது சட்டவிரோதமான நிறுவனமொன்று என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வடமேல் மாகாணத்தில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்காக உரிய சுற்றாடல் ஆய்வின்றி கடந்த காலங்களில் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்