by Staff Writer 31-08-2018 | 8:07 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு உதவி புரிந்தமைக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனையை திருத்தத்திற்கு உட்படுத்துமாறு கோரி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக செயற்பட்ட மூன்று குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று பேரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தால் தலா 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விக்னேஷ்வரன் வரதநாதன், கதிர்தம்பி சிவகுமார், செல்லையா நவரத்னம் ஆகிய மூன்று குற்றவாளிகளால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வென்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயிஷா ஜினசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலனைக்கு உட்படுத்திய நீதிபதிகள் குழாம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.