மக்கள் சக்தி: காட்டு யானை தாக்கி உயிரிழந்த சிறுவன்

மக்கள் சக்தி: காட்டு யானை தாக்கி உயிரிழந்த சிறுவன், நீரின்றி அல்லற்படும் மக்கள்

by Bella Dalima 31-08-2018 | 9:05 PM
Colombo (News 1st)  18 வயதான சிவலிங்கம் ஜனார்த்தன் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த விடயம், இல்லங்கள் தோறும் பயணிக்கும் மக்கள் சக்தி குழுவினருக்கு இன்று அறியக் கிடைத்தது. ஜனார்த்தன் இரண்டு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தின் இளைய மகனாவார். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சின்னவத்தை - மலையர்கட்டு கிராமத்திற்குள் இன்று அதிகாலை 5 மணியளவில் நுழைந்த யானை தாக்கியதில் ஜனார்த்தன் உயிரிழந்தார். சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மலையர்கட்டு கிராமத்து மக்கள் யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினருக்கு இன்று அறியக்கிடைத்த மக்களின் பிரச்சினைகள் சில... அம்பாறை - மத்திய முகாம் மக்கள் விவசாயம் மேற்கொள்ள நீரின்றி அல்லற்படுகின்றனர்
  • வலதாப்பிட்டி, வீரச்சோலை, வீரமுனை மற்றும் அட்டப்பள்ளம் கிராம மக்கள் நீர் பிரச்சினை மற்றும் யானைகளின் அச்சுறுத்தலினால் துயரப்படுகின்றனர்.
  • அறநெறி பாடசாலை இன்மையால் கோணாகல கிராம மாணவர்கள் அறநெறி கல்வியை பயில முடியாதுள்ளனர்.
குருநாகல் - மகானான்னேரியா - வன்னிஅமுனகொலே கிராமத்தில் விவசாயத்திற்கு நீரின்மையால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைகளும் இவர்களை அச்சுறுத்தி வருகின்றன.
  • விலகல கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் போக்குவரத்து செய்யமுடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை - சூரியவெவ, கங்ஹகபெலஸ்ஸ கிராம மக்கள் நீரின்மையால் அல்லற்படுவதை மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினாரால் அறிந்துகொள்ள முடிந்தது.
  • மஹகல்வெவ கனிஷ்ட பாடசாலையில் 11 கட்டிடங்கள் உள்ள போதிலும், மூன்று கட்டிடங்களிலுள்ள ஐந்து வகுப்பறைகளை மாத்திரம் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். ஏனையவை அழிவடைந்த நிலையிலுள்ளன.